December 8, 2022

அடுத்த ஆண்டிலும் எரிபொருள் டீசல் விலை அதிகரிக்கும்
உலக வங்கி எச்சரிக்கை

புது தில்லி, அக்.28

இந்தாண்டில் கச்சா எண்ணெய் விலை சுமார் 60% உயர்ந்ததால் மத்திய அரசுக்கு பெரும் சுமை உண்டானது. எரிபொருட்கள் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்தன. 2023ல் கச்சா எண்ணெய் விலை 11% சரியும், இருப்பினும் ஐந்து ஆண்டுகால சராசரியை விட 75% அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை சுமார் 65 டாலராக இருந்தது, ஜூன் மாதத்தில் 60 சதவீதம் மேல் உயர்ந்து 107 டாலர் வரை சென்றது. மத்திய அரசு ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி விலைவாசியை குறைக்க போராடியது. இந்நிலையில், அமெரிக்க தங்கள் நாட்டு விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது. இது டாலரை வலுப்படுத்தியது. இதனால் டாலரில் முதலீடுகள் குவிந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டது. இந்த சரிவு இந்தியாவில் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

இந்நிலையில், உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருப்பதாவது: பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்ற கவலைக்களுக்கு இடையேயும் பெரும்பாலான பொருட்களின் விலைகள் அவற்றின் சமீபத்திய உச்சத்திலிருந்து குறைந்துள்ளன. இருப்பினும் வளரும் பொருளாதார நாடுகள் பெரும்பாலானவற்றின் கரன்சிகளின் மதிப்பு சரிந்து, உணவு மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்துகிறது. .

2023ல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சராசரியாக ஒரு பீப்பாய் 92 டாலராக ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் இதுவரையில்லாத உச்சத்திலிருந்த இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி இரண்டின் விலையும் 2023ல் குறையும் என கணிக்கிறோம். 2024ல், ஆஸ்திரேலிய நிலக்கரி மற்றும் அமெரிக்க இயற்கை எரிவாயு விலைகள் அவற்றின் ஐந்து ஆண்டுகால சராசரி விலையை விட இரட்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலைகள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

Spread the love