சென்னை, ஜன.18
அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி சு.பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளதாவது:
அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதில் சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி நடப்பு 2022-23-ம் நிதியாண்டு 4-ம் காலாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.60 சதத்தில் இருந்து 8 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கிசான் விகாஸ் பத்திர சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7 சதத்தில் இருந்து 7.20 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கால வைப்பு நிதிக்கான (டேர்ம் டெபாசிட்) வட்டி விகிதம் ஓராண்டுக்கு 5.50 சதத்தில் இருந்து 6.60 சதமாகவும், இரண்டாண்டுக்கு 5.70 சதத்தில் இருந்து 6.80 சதமாகவும், 3 ஆண்டுக்கு 5.80 சதத்தில் இருந்து 6.90 சதமாகவும், 5 ஆண்டுக்கு 6.70 சதத்தில் இருந்து 7 சதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான (5 ஆண்டுகள்) வட்டி விகிதம் 6.80 சதத்தில் இருந்து 7 சதமாகவும், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.70 சதத்தில் இருந்து 7.10 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், சேமிப்புக் கணக்கு, செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப், தொடர் வைப்பு (ஆர்.டி.) ஆகிய திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.