September 27, 2022

ஃபாஸ்டேக் மூலம் மத்திய அரசுக்கு
ரூ.58.189 லட்சம் கோடி வருவாய்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புது தில்லி, பிப்.9

நாடு முழுவதும் 31 ஜனவரி 2022 வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேகுகள் விநியோகிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேகுகள் மூலம் இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஜனவரி 2020 முதல் 5, பிப்ரவரி 2022 வரை ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுங்கக்கட்டண வசூல் மையங்களில் ஃபாஸ்டேக் மூலம் தவறாக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் குறைக்க / ஒழிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள்

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% ஹைட்ரஜன் கலந்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

தெரிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹைட்ரஜன் எரிபொருள், வாகனங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் 2020ஆம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள், பேட்டரி தயாரிப்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய திட்டங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செயல்படுத்திவருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், உயிரிக்கழிவுகளை எரிபொருளாக்கி அதிலிருந்து உயர்தர ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலையையும், சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று தயாள்பாக் கல்விக்கழகம் தேசிய சூரியசக்தி நிறுவனமும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பதாகைகளை அகற்றுதல்

மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், அங்கீகரிக்கப்படாத விளம்பர சாதனங்கள்/பதாகைகள்/விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் தில்லி நகராட்சி அமைப்புகளின் தில்லி வெளிப்புற விளம்பரக் கொள்கை 2017-ல் உள்ளன (மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது).

சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் தில்லி சட்டம்-2007-ன் படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தில்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் ஒரு கொள்கை உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 116 படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனமும் மாநில அரசின் அதிகாரிகளிடம் உதவி பெறலாம். அதன்படி, உள்ளூர் நிர்வாகத்தின் தொடர்ச்சியான உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள விளம்பரங்களை அகற்றும் பணி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

Spread the love